Sunday, November 28, 2004

பல்லவியும் சரணமும் - IX

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash மற்றும் சந்திரவதனா ஆகியோர் 2 பேராவது பின்னூட்டம் இட்டபிறகு தான், போட்டியில் ஆஜராகுமாறு, பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

1. உண்டால் மயக்கும் கள்ளாவது அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது ...
2. உந்தன் சங்கீத சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி ...
3. உந்தன் மீன்விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே ஆணெழில் முகம் வான்மதியென...
4. கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன் காற்றடிக்கும் நேரம் ...
5. நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே? அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் ...
6. புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும், ஆகாய மேகங்கள் நீருற்ற வேண்டும்...
7. காதல் என்பது தேன்கூடு அதை கட்டுவது என்பது பெரும்பாடு ...
8. இளமையின் கனவுகள் கண்ணோரம் துளிர் விடும், கைகள் இடைதனில்...
9. தாங்காது கண்ணா என் தளிர்மேனி நூலினம், தூங்காத கண்கள் ...
10. படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, November 27, 2004

பல்லவியும் சரணமும் - VIII

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash மற்றும் சந்திரவதனா ஆகியோர் 2 பேராவது பின்னூட்டம் இட்டபிறகு தான், போட்டியில் ஆஜராகுமாறு, பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

1. என் வாழ்வில் நீ வந்தது விதியானால், நீ எந்தன் உயிரன்றோ ...
2. மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு, வெண்சொர்க்கமே பொய் ...
3. கடற்கரை காற்றே வழியை விடு, தேவதை வந்தாள் என்னோடு ...
4. முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே, என் காதல் சேதி போகும் பல்லாக்கிலே ...
5. மணவினைகள் யாருடனோ, மாயவனின் விதிவகைகள் ...
6. அழகான ஆசை முகம், அடங்கதா ஆசை தரும், பொன்னந்தி மாலை ...
7. நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேடையும் தேவையென்ன? சொந்தங்களே இல்லாமல் ...
8. நீ பார்த்ததால் தானடி பூ பூத்தது மார்கழி ...
9. தென்காற்றின் இன்பங்களே, தேனாடும் ரோஜாக்களே, என்னென்ன ஜாலங்களே ...
10. பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து, பார்த்திருந்த காலமெல்லாம் பழங்கதை ஆனதடி ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, November 23, 2004

இந்து ஒற்றுமை - சில எண்ணங்கள்

இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு இந்து ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இந்துக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லாததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதுவும், நீதிமன்றத்தில் அரசு வக்கீல் மிகச் சாதாரணமாக ஒரு மடாதிபதியை 'undeserving criminal' என்றழைப்பதும், அவர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படுவதும், சலுகைகள் மறுக்கப்பட்டு ஒரு சாதாரண குற்றவாளியைப் போல் அவர் நடத்தப்படுவதும், அவற்றுக்கு எந்த எதிர்குரலும் கேட்காததும், யாருமே எதிர்பார்க்காதது தான்!

இதற்கான பல காரணங்களில் முக்கியமானது, சங்கர மடத்தை, குறுகிய நோக்குடைய, ஒரு பார்ப்பனீயத்தின் சின்னமாகவே பலர் பார்க்கிறார்கள். இதில் உண்மையும் இருக்கிறது. இத்தனைக்கும் ஜெயேந்திரர், மற்ற மடாதிபதிகள் போல் அல்லாமல், சமூக மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சங்கர மடம் மூலம் செயல்படுத்தவும், தலித்துக்களுக்கு ஆதரவாக பேசவும், நடக்கவும் ஓரளவு முயன்றார் எனக் கூறலாம். இருப்பினும், இந்துக்களில் அனைத்து சாராரையும் சரிசமமாகக் கருதி, அவர்களை ஒன்றிணைத்து, இந்து மதத்தை வலுப்படுத்த மடமும், அதன் மடாதிபதிகளும் தவறி விட்டதன் விளைவே, ஜெயேந்திரர் கைதுக்குப் பின் இந்துக்களிடையே நிலவும் ஓர் ஆழ்ந்த மௌனமும், அனுதாபமின்மையும்.

இந்துக்களுக்கு எதிரானவர்கள், தமிழ்நாட்டில் இந்துக்களிடையே ஒற்றுமை குறைவு என்பதைத் மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்! இந்துக்களிடையே பிராந்தியம், மொழி, இனம், குலம் என்ற வகையில் பல வேறுபாடுகள் பல காலமாகவே (வளர்க்கப்பட்டும்!) நிலவியும் வருகிறது. இதில், மதச்சார்பற்ற (என்று கூறிக்கொள்ளும்!) அரசியல் கட்சிகள் குளிர் காய்கின்றன. இந்துக்கள் பொதுவாக ஒற்றுமையாக இருந்து செயல்படுவது, வினாயகர் ஊர்வலங்களிலும், கோயில் குடமுழுக்கு விழாக்களிலும் தான்! தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இயல்பாக இந்துவாக இருக்கும் பலர், வெளியே தங்களை மதச்சார்பற்றவராகக் காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளது ஏன் என்பது விளங்கவில்லை!

இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும், தலித்துக்களும் மிகக் குறைவே. இந்நிலை மாறி, அவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுவது தான், இந்துக்களிடையே ஒற்றுமை தழைக்க வழி வகுக்கும். இக்கால கட்டத்தில், நம் நாட்டிற்கு மிக அவசியமானதும் கூட!!!

Saturday, November 20, 2004

வெகுண்டு

வெகுண்டு

நான் படித்ததெல்லாம் சென்னையின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின் இந்து உயர்நிலைப் பள்ளியில் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி அமைந்த பெரிய தெரு, பெயரளவில் தான் பெரிசு. அவ்வளவாக அகலம் இல்லாத அத்தெருவில், பல வகைக் கடைகளும், வங்கிகளும், தங்கும் விடுதிகளும் 'Big street பிள்ளையார்' கோயிலும் இருந்தன. இதனால், பெரிய தெரு எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும். தெருவின் இருமருங்கிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, மீதமிருந்த தெருவின் மத்தியப் பகுதியில், மனிதர்களும், வாகனங்களும், அல்லிக்கேணி மாடுகளும் இடத்துக்காக சண்டை போட்ட வண்ணம் இருக்கும் காட்சியை, தினமும் காணலாம்.

சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன்! நான் அப்போது 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். உடன் படித்த மாணவனான .... பெயர் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது ... என் நல்ல நண்பன். ஆஜானுபாகு ஆக, நல்ல பால் வண்ணத்தில் இருந்த அவனுக்கு 'வெள்ளை குண்டன்' என்ற காரணப்பெயர் சூட்டப்பட்டு, நாட்போக்கில் அது மருவி, 'வெகுண்டு' என்பது நிலைத்து விட்டது. எனக்கும் பள்ளியில் புனைப்பெயர் உண்டு. அதற்கும் நான் கூற வந்த விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லாததால், அதைப்பற்றிய ப்ரஸ்தாபம் இங்கு தேவையற்றது.

வெகுண்டுவின் தந்தையார், உடுப்பியிலிருந்து சென்னை வந்த கன்னடக்காரர். அவர் தொழில் என்ன என்று இந்நேரம் நீங்களே யூகித்திருப்பீர்களே! கரெக்ட்! அவர் மேற்கூறிய பெரிய தெருவில் 'உடுப்பி' வகை உணவகம் நடத்தி வந்தார். மனிதர், பக்திமான், நேர்மையானவர், மிக நல்லவரும் கூட. இந்த அளவுக்குக் கூட அவரை நான் உயர்த்திப் பேசவில்லை என்றால், நன்றி கெட்டவனாகி விடுவேன். அவ்வுணவகத்தில், வெகுண்டுவுடன் அமர்ந்து எவ்வளவு தடவை ஓசியில் சாப்பிட்டிருக்கிறேன் தெரியுமா?!

வெகுண்டுவை படிப்பில் மக்கு என்று கூற இயலாது. 'மஹாமக்கு' என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. சரஸ்வதி தேவி தன் கடாட்சத்தை அவன் பக்கம் திருப்ப மறந்தே போனாள். அவனை 'வெகுண்டு' என்று கூப்பிடுவோமே தவிர, அவன் ஒருபோதும் வெகுண்டெழுந்தது கிடையாது! சாதுவானவன். சுருள் சுருளாக முடியும், அமைதியான முகமும், அசப்பில் பார்ப்பதற்கு 'பாச மலர்' படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலவே இருப்பான். அதி தீவிர சிவாஜி ரசிகனும் கூட. அந்த 'படிக்காத மேதை'யால் தான் நானும் ஒரு சிவாஜி ரசிகன் ஆனேன். வெகுண்டுவின் நடை உடை பாவனைகளில் 'சிவாஜித்தனம்' மிகுந்திருக்கும். அவனுக்கு பல சிவாஜிப் படப்பாடல்களும் வசனங்களும் அத்துப்படி!! பல சமயங்களில் சிவாஜியின் திரைப்பட வசனங்களை எனக்கு அழகாகவே பேசிக்காட்டுவான். கேட்டே ஆக வேண்டும்! இல்லையென்றால், ஓசி சாப்பாடு கிடைக்காதே!

வெகுண்டு ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் ஒரு சிவாஜி பட வசனம் அல்லது பாட்டு தயாராக வைத்திருப்பான்! மளிகைக் கடைக்காரர் அவன் அம்மாவிடம் பணம் கேட்கும்போது 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் தருவது பாக்கி!' என்பான். அவன் அண்ணன் தந்தையாரிடம் அவனைப் போட்டுக் கொடுத்தால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' என்று பாடுவான். என் அக்கா சற்று வேகமாக நடந்து சென்றால் 'ஆஹா, மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்' என்று கிண்டலடிப்பான். பக்கத்து வீட்டு அறுவைக் கிழவர் பரமபதம் பெற்றபோது 'போனால் போகட்டும் போடா' என்று விரக்தியில்லாமல் பாடினான்!!! மொத்தத்தில், வெகுண்டு இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. வெகுண்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, திருவிளையாடலில் சிவாஜி ஸ்டைலாக நடப்பது போல், குளியலறை நோக்கி நடந்து செல்லும் காட்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது.

வெகுண்டு அரையிறுதி தேர்வில் ஆங்கிலத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், அவன் தந்தையார் வெகுண்டார். அவனை என் தாத்தாவிடம் ஆங்கில இலக்கணம் கற்க அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்ற என் தாத்தாவிடம் பல வருடங்களுக்குப் பின் அகப்பட்ட ஒரே மாணவன் வெகுண்டு! அதனால், அவன் பாடு படுதிண்டாட்டம் ஆயிற்று! என் தாத்தா சாதாரணமாகவே ஒரு விஷயத்தை 2 தடவை கூறுவார். படிப்பு சம்பந்தப்பட்டதை, 4 முறை அழுத்தமாகக் கூறுவார்! வெகுண்டு஢ சமாசாரத்தில், கற்றுக் கொடுக்க வேண்டிய ஒவ்வொன்றையும் 8 முறை சொல்லி, அதோடு நில்லாமல், அவனை 2 முறை திரும்ப கூறச்சொல்லி வாட்டி வறுத்தெடுத்து விட்டார்! "உன் தாத்தா கிட்ட டியூஷன் போணுன்றதை நினைச்சாலே வயத்தை கலக்கறதுரா" என்று அவன் புலம்பும்போது அவனைப் பார்க்க எனக்குப் பாவமாய் இருக்கும்! "நம்ம வாத்தியாரை விட என் தாத்தா எவ்வளவோ மேல் இல்லையா?" என்று நான் ஆறுதல் கூறுவேன்.

எங்களது வகுப்பு ஆசிரியரான திரு.ராமசாமி அய்யங்கார் கண்டிப்புக்கு பேர் போனவர். சிறுதவறு செய்தாலும் பிரம்பால் விளாசி விடுவார். நான் படிப்பில் கெட்டி, அதனால் அடி வாங்கும் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், விதி ஒரு முறை வேறு ரூபத்தில் விளையாடி, அவரிடம் பிரம்படி பட வைத்ததை என்னவென்று சொல்ல?! காரணம்?

வேறு யார்? வெகுண்டு தான்! சுட்டுப் போட்டாலும் படிப்பேறாத அவனை ஓடவிட்டு நிதானமாகத் துரத்தி 'அந்தணன் இரக்கமில்லான்' என உரக்கச் சொல்லியபடி, ராமசாமி வாத்தியார் பிரம்படி வழங்குவது, வகுப்பறையில் வாடிக்கையாக நிகழும் ஒரு விஷயம் தான்! வெகுண்டுவும் லேசுப்பட்டவன் அல்லன். வாத்தியார் அடிப்பதற்கு முன்னமே, அவரை வெறுப்பேற்றும் வண்ணம், 'ஐயோ, இப்படி அடிக்கிறீங்களே, உயிர் போறதே, ஐயோ, கொல்றாறே!' என்று கூக்குரலிடத் தொடங்கி விடுவான். அச்சமயங்களில் வகுப்பிலுள்ள நானும் மற்ற மாணவர்களும் பீதி, பச்சாதாபம், சிரிப்பு போன்ற பல்வகை உணர்வுகளுக்கு ஆளாகி இஞ்சி தின்ற மந்திகள் போல் காட்சியளிப்போம்!?

வாத்தியார் ஒரு முறை வெகுண்டுவை ஏதோ ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து என்னிடம் ஒப்பிக்குமாறு கூறிச் சென்று விட்டார். அவனும் முயன்றான். ஆனால், அவனாவது ஒப்பிப்பதாவது!? என் கன்னத்தைத் தடவி கெஞ்ச ஆரம்பித்து விட்டான். நானும் கவசகுண்டலம் இல்லாத கர்ணனாக என்னை பாவித்துக் கொண்டு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முற்பட்டேன்!! வகுப்புக்குத் திரும்பி வந்த ஆசிரியரிடம் வெகுண்டு பாடத்தைப் படித்து அருமையாக ஒப்பித்து விட்டதாக பொய் உரைத்தேன். இதில் ஒரு தமாஷ் பாருங்கள்! 'பொய் உரைத்த வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பார்கள். நானோ வெகுண்டுவிடம் போஜனம் வாங்கி உண்டதால், பொய் சொல்லும் நிலைக்கு ஆளானேன்!

விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது! சதா சர்வ காலமும் என் கூற்றை நம்பும் ராமசாமி வாத்தியார், என்றும் இல்லாத் திருநாளாக அன்று, 'சரி, நீ படித்ததை மறுபடி என்னிடம் ஒரு தடவை கூறு, பார்க்கலாம்!' என்று அந்த திருவாழத்தானிடம் கேட்டார். எனக்கோ அஸ்தியில் ஜுரம் கண்டது. வெகுண்டு அபரிமிதமாக விழிக்கவே, வாத்தியார் என் பக்கம் திரும்பி, 'படிப்போடு பொய் உரைப்பதும் உனக்கு நன்று வருமோ??' என்ற விபரீத வினாவெழுப்பி சில பிரம்படிகளை எனக்குப் பரிசாக வழங்கினார்.

அதுவரை பிரம்படியே கண்டிராத எனக்கு, அந்த அடிகள் தந்த வலியில் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று! இரண்டு நாள் காய்ச்சல் வேறு! காய்ச்சலின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது 'இனி வெகுண்டுவிடம் ஓசியில் வாங்கி உண்பதில்லை' என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்! என்ன செய்வது? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! என் பள்ளி வாழ்க்கையில், நான் பட்ட முதலும் கடைசியுமான பிரம்படிகளைப் வாங்கித் தந்த பெருமை என்னருமை வெகுண்டுவுக்குத் தான்!

வெகுண்டுவை ராமசாமி வாத்தியார் அடுத்த வருடமும் 7-ஆம் வகுப்பில் உட்கார வைத்து விடுவார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவன் தேர்ச்சி பெற்று என்னை அதிசயத்தில் ஆழ்த்தி விட்டான்! அடுத்த ஓரிரு வருடங்களில் அவன் தந்தையார் ஹோட்டலை மூடி விட்டார். அதன் தொடர்ச்சியாக வெகுண்டுவும் பள்ளியிலிருந்து விலகி அவன் குடும்பத்தார் வேறேதோ ஊருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஹோட்டல் இருந்த இடத்தில் 'திருநெல்வேலி அல்வா ஹவுஸ்' என்ற போர்டு மாட்டிய இனிப்புக் கடை தோன்றியது. காலப்போக்கில் வெகுண்டுவைப் பற்றிய ஞாபகங்கள் என்னை விட்டு மெல்ல மெல்ல விலகி விட்டன. சிவாஜி பட வசனங்களும் பாடல்களும் கூடத் தான்!

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


நாலைந்து வருடங்களுக்கு முன், ஒரு நவராத்திரி விடுமுறையில் என் மனைவி மகளுடன் மைசூரை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். மைசூரின் உலகப் பிரசத்தி பெற்ற தசரா ஊர்வலத்தை கண்டு ரசிக்க ஒரு ஜன சமுத்திரமே திரண்டிருந்தது. ஜம்பூ சவாரி என்றழைக்கப்படும் அவ்வூர்வலத்தில் பிரதான தளபதி முன்னே வர, தேவி சாமுண்டேஸ்வரியின் விக்ரகம் வைக்கப்பட்ட தங்க ஹௌடாவை முதுகில் சுமந்தபடி அழகாக அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட யானை ஒன்று பின்னே நடந்து வந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்ற பட்டாடை உடுத்திய கம்பீர யானைகளும், குதிரை வீரர்களும், பாண்டு மற்றும் நாகஸ்வர வாத்தியக்காரர்களும், கலைக்குழுக்களும் வரிசையாக வந்த காட்சி பார்க்க மிக அற்புதமாக இருந்தது.

ஜம்பூ சவாரி முடிந்ததும், என் மனைவி 'அம்மு மத்யானம் ஒண்ணுமே சாப்பிடலை. வழியிலேயே எங்கேயாவது சாப்டுட்டு அப்றமா நம்ம ரூமுக்கு போயிடலாம்' என்றாள். ஏதோ ஒரு ஹோட்டலில் எதையோ சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் தரும்போது, கல்லாவில் அமர்ந்திருந்தவர் என்னை ஒரு மாதிரி சந்தேகப் பார்வை பார்ப்பதை கவனித்து 'சார், நல்ல நோட்டு தான், கவலையே படாதீங்க!' என்றேன். அவர் இன்னும் சந்தேகம் விலகாமல், ஒருவித பிரமிப்புடன் 'சார், நீ ... நீங்கள் ஹிண்டு ஹைஸ்கூல் பாலாஜி தானே?! என்னைத் தெரியலையா? நான் தான் வெகுண்டு!' என்றார்(ன்)!?

என்னுடன் பள்ளியில் படித்த வெள்ளைக் குண்டன், அச்சமயம் சற்றே மெலிந்து கறுத்து முன்மண்டையில் பெருமளவு முடியும் இழந்திருந்ததால், என்னால் அவனை யாரென்று அறிய முடியாமல் போனது! வெகுண்டு கேட்ட அடுத்த கேள்வி,'ராமசாமி வாத்தியார் எப்படி இருக்கிறார்?'. வாத்தியார் பல ஆண்டுகளுக்கு முன்னரே வகுப்பில் பாடம் எடுக்கும்போதே மாரடைப்பால் இறந்து விட்டதை அவனிடம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை! அவனுக்காக ஒரு முறை வாத்தியாரிடம் பொய் சொல்லி பிரம்படி பட்டது என் நினைவில் நிழலாடியது! சிறுவயதில் இருந்தது போலவே, அச்சமயமும் சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து வெகுண்டு என்னை மேலும் கடன் பட்டவனாக ஆக்கி விட்டான்!

Published in Thinnai Nov 18 2004

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, November 18, 2004

ஜெயேந்திரர் அறியா ஆறு கட்டளைகள்!


1. தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் டம்மியாக வைத்திருக்க வேண்டிய சூட்சமங்களை கற்காமல் விட்டது!

2. தான் கைது செய்யப்பட்ட நிகழ்வை படம் பிடித்து டப்பிங்கோடு ஒளிபரப்ப ஒரு 'சங்கர டிவி' யை தொடங்காமல் விட்டது!
3. நடுத்தெருவில் அமர்ந்து கொண்டு 'தர்ணா' செய்யும் சாகஸத்தை அறிய மறந்தது!
4. செம்மொழியாம் தமிழ்மொழியில் புலம்புவதற்கு தேவையான புலமையைப் பெறத் தவறியது!
5. தனக்குச் சாதகமான வகையில் ஆட்களை சேர்த்துக் கொள்ளும் அல்லது கழற்றி விடும் சாணக்கியத்தனம் இல்லாமல் இருந்தது!
6. சமயதிற்கேற்ப (TIMING SENSE) ஊடகங்களுக்கு அற்புதமாக ஸ்டேட்மெண்ட் தரும் சாதுரியம் இல்லாமல் இருந்தது!

இவ்வாறு தேவையானவற்றை அறிய / கற்கத் தவறிய ஜயேந்திரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவரே :-)
மேற்கூறியவை போல் இன்னும் ஏதாவது இருப்பின், நீங்களும் கூறலாம்!

Wednesday, November 17, 2004

ஒரு மரத்தின் இறப்பு!

என்னை மிகவும் பாதித்த 'Death of a Tree' என்ற ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது!

அந்த மின்ரம்பத்தின் பேரிரைச்சல்
மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்தது!
அவள் முன்னோக்கிச் சாய்ந்தாள், வீழ்ந்தாள்!


ஒரு சோகமிக்க திடீர் தாக்கம்,
அப்பசுமைத் தாயின் ஊனத்திலும்
அவள் நீட்டல்களின் இறுதி மடங்கலிலும்,
மிச்சமிருந்த அவளை மெல்லத் தீண்டினேன்!

ஒரு நூறு ஆண்டுகளுக்கான நளினப் பேரழகு அழிந்தது!
அவளது இலைகளின் வெளிர் நிறமானது
அக்காலை நேரத் தூறலில் ஒன்றறக் கலந்தது!

அந்த வனராணியை வீழ்த்திய பெருமை ஒரு
பெருங்காற்றுக்கோ புயலுக்கோ சேர்ந்திருக்கலாம்!
அவளுக்கு அது ஒரு சரியான யுத்தம் விளைத்த
கௌரவ இறப்பாகவும், இந்த அவமானமிக்க
சர்வ நிச்சயத்தினும் ஏற்றதாகவும் அமைந்திருக்கலாம்!

எதனால்? இவ்வீழ்ச்சி மானுடன் கையால் விளைந்தது,
மனிதன் என்றாலே துன்பமும் வலியுமே!
நான் அவ்விடத்தை விட்டு வேதனையோடு
ஒரு இழப்பை நன்குணர்ந்து அகன்று சென்றேன்!


இதுவும் வாழ்க்கை விளையாட்டில் ஒரு அங்கம் தானோ?


ஒரு 'வெண்பா' முயற்சி!

சைதன்யா மீனாக்ஸ் போன்றோரின் வெண்பாக்கள் தந்த ஊக்கத்தால், நானும் இந்த விஷப்பரீட்சையில் இறங்கினேன் :-) அதாவது, அவர்கள் எழுதிய வெண்பாக்களின் வடிவங்களை என்னால் இயன்ற அளவு அப்படியே பிரதியெடுத்து கீழுள்ளவற்றை புனைந்துள்ளேன்! நான் வெண்பா இலக்கணமெல்லாம் மறந்து பலகாலம் ஆகி விட்டது:-( தவறுகள் இருக்கலாம் (இருக்கும்!), தளை தட்டும்! சுட்டிக் காட்டுங்கள், திருத்தி/கற்றுக் கொள்கிறேன்! வெண்பாவைப் பற்றி வினாக்கள் எழுப்புவதை விட, இந்த அப்ரோச் சற்று சுவாரசியமானதல்லவா?

சங்கர மடத்துக்கே தலைவராம் ஜெயேந்திரர்
பங்கமது வந்ததே பேருக்கு - ஆயினும்
சாய்பாபா சங்கதி போலே இதுவும்
போய்விடும் உடைப்பில் பாரு!

ஜங்கிள்க்கு ராசா வீரப்பனை துணிஞ்சு
சிங்கிளா டிரைவராப் போயி - வெளியே
கொணர்ந்த சரவணனை பாராட்டி நிலமும்
பணமும் கொடுத்தார் அம்மா!

தாத்தா கொடுத்த பிரஷரில, எங்கம்மா
காத்தா எடுத்த நடவடிக்கை - அதுலே
பழிக்குத்தான் ஆளாயி செயிலுக்கும் போயி
முழிபிதுங்கிப் போனார் சத்குரு!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, November 14, 2004

ஜெயேந்திரர் கைது - சில எண்ணங்கள்

ஜெயேந்திரர் கைது பற்றிய செய்தியும், அதன் பின்னணியும் இச்சமயம் அனைவரும் அறிந்த ஒன்றே. நானும் வலைப்பதிவுகளில் இது குறித்து எழுதப்பட்ட அனைத்தையும் படித்து விட்டுத் தான், இதை எழுதுகிறேன். குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால், இவ்விஷயத்தில் அது நிறைவேற்றப்பட்ட விதம் மிக்க கண்டனத்துக்கு உரியது. இரவோடு இரவாக, தனி விமானத்தில் பயணம் செய்து, மெஹ்பூப் நகரில் ஒருவரை கைது செய்தது, அனாவசியமாகவும் அபத்தமான செயலாகவும் தொன்றுகிறது. அவர் என்ன வீரப்பன் போல தப்பியோடக் கூடியவரா? அவரை அழைத்து விசாரணை செய்து அதன் தொடர்ச்சியாக அவரை கைது செய்திருக்கலாம். அவரும் ஒத்துழைத்திருப்பார்.

கலைஞரை இரவில் கைது செய்தபோது, வயதில் மூத்த ஒரு பண்பட்ட அரசியல் தலைவரிடம் அவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று பயங்கரமாக கண்டனம் தெரிவித்த பலர் இப்போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்? ஜெயேந்திரரும் ஒரு பாரம்பரியம் மிக்க மடத்தின் தலைவர் தானே, அவரும் வயதில் மூத்தவர் தான், உடல் நலம் சற்று குறைந்தவர் தான்! முக்கியமாக, தனி விமானத்தில் ஆயுதம் தாங்கிய காவலரை அனுப்பி அவரை சென்னை கொண்டு வந்தது சற்று ஓவர் தான். அவ்வாறு ஆயுதம் ஏந்தியவரை விமானத்தில் அனுப்புவதற்கான அனுமதியும் உரிய அதிகாரிகளிடம் பெறப்படவும் இல்லை! மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது எவ்விதத்தில் நியாயம்?

ஜெயேந்திரரின் மீதான வழக்கு நேர்மையான முறையில் நடத்தப்பட்டு, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதே சமயம், அவருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கக் கூடாது என்ற சிலரின் வாதத்திலும் அர்த்தமும் இல்லை, நேர்மையும் இல்லை!?! குற்றம் சாட்டப்பட்ட ஒரு அடிமட்ட அரசியல்வாதி கூட தன் செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் பல சலுகைகள் பெறுகிறார் என்பது நிதர்சனமான உண்மை! சொல்லப்போனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்வது தான் ஜனநாயகத்தில் கண்டிப்பாக மன்னிக்கக் கூடாத ஒன்று. அவர்கள் தான் எந்த ஒரு சலுகையும் பெற முடியாத வகையில், சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இங்கே வெறும் வாய் வார்த்தை தான் என்பதை யாரும் மறுக்க இயலாது. எனவே, ஜெயேந்திரரின் வயதையும், அவர் பெருமை மிக்க ஒரு மடத்தின் தலைவர் என்பதையும் கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்குவதால் ஒன்றும் குடி முழுகி விடாது! சிறப்புச் சலுகைகள் தரக்கூடாது என்று இப்போது பேசுகிறவர்கள் அழகிரி கைதானபோது அதைப்பற்றி வாயே திறக்கவில்லையே?!?

ஜெயேந்திரர் என்ற தனிப்பட்ட மனிதரின் பல செயல்களில் எனக்கும் உடன்பாடு கிடையாது. குறிப்பாக, அயோத்தி விவகாரத்தில் அவர் மூக்கை நுழைத்தது, திருப்பதி சென்று ஒரு குழப்பத்தை உண்டாக்கியது என பல விஷயங்கள் உண்டு. சிலர் சொல்வதை போல், அவரால் இந்து மதத்திற்கே களங்கம் என்ற கூற்றையும் என்னால் ஏற்க இயலாது. போப்பாண்டவர் உலகளாவிய கத்தோலிக்கர்களுக்கு தலைவராக இருப்பது போல், ஜெயேந்திரர் ஒன்றும் உலகளாவிய இந்துக்களுக்கு தலைவர் (அல்லது மதகுரு) இல்லை. அவரை தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சைவர்களின் மரியாதைக்குரியவர் என்று மட்டுமே கொள்ளலாம்! ஜெயேந்திரர் கொலை செய்யத் தூண்டினாரோ இல்லையோ, இச்சம்பவத்தினால் இந்துக்களுக்கு அவப்பெயர் வர காரணமாகி விட்டார். என்னவோ போங்கள், நாட்டில் நடப்பது ஒன்றும் நன்றாக இல்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


Friday, November 12, 2004

பல்லவியும் சரணமும் - V I I

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!
போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் :-))

1. நியாயங்களோ பொதுவானவை, புரியாமல் போனது ...
2. உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும், நிலை உயரும்போதும் பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் ...
3. நம்ம காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்ல, நானொன்று நீயன்று தாம்மா ...
4. உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ?
5. பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே, உறவுக்கு உயிர் தந்தாயே ...
6. வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே, நல்ல குடும்பம் ஒளி மயமாக ...
7. எதனைக் கண்டான், மதங்களை படைத்தான் ....
8. நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் ....
9. உண்டாவது ரெண்டானதால், ஊர் போவது நாலானதால், தாயாலே வந்தது, தீயாலே வெந்தது ...
10. பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமாக, நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாடு, மன்மதன் சேனைகள் ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, November 11, 2004

கலைத்தாய்க்கு கோலிவுட் எடுத்த நன்றி விழா!

நமது தமிழ்த் திரையுலகத்தினர் தாங்கள் அ.இ.அ.தி.மு.க பிரமுகர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்த நன்றி கூறல் விழாவின் மூலம் மிக அற்புதமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்! விழாவில் பேசிய ஒவ்வொருவரும் 'அம்மா'வுக்குச் சூட்டிய புகழாரத்தின் விளைவு, அதை டிவியில் பார்த்த எனக்கே சீதளத்தால் (ஐஸ் மழையைக் கண்டதால்!) காது குத்தல் வந்து விட்டது! பேசிய அனைவரும், விழா மேடையை ஒரு நாடக மேடையாக்கி அமர்க்களமாக நடித்துத் தள்ளி விட்டார்கள்!

மனோரமா போன்ற, பல படங்களில் சிறப்பாக நடித்துள்ள ஒரு மூத்த நடிகை ஏன் இவ்வாறு முதல்வரை 'பொறுமையில் பூமாதேவி, தங்கத்தாரகை, வீரப்பன் என்னும் நரகாசுரனை வதம் செய்த அன்னை சத்தியபாமா' என்றெல்லாம் (டிவியில் பார்ப்பவர்களுக்கு இந்த முகஸ்துதி எவ்வளவு கிண்டலாகவும் அபத்தமாகவும் இருக்கும் என்பதை உணராமல்!) புகழ்ந்து தள்ளினார் என்பது அவருக்கே வெளிச்சம். சங்கப்புலவர் போல் 'அம்மா' மேல் ஒரு பாடலும் இயற்றிப் பாடினார். அவருக்கு அப்படி புகழ வேண்டிய கட்டாயம் இருப்பின், சொல்ல வேண்டியதை ஒரு கேஸட்டாகப் போட்டால் கட்சிக்காரர்களுக்கு உபயோகமாக இருக்கும்!

இயக்குனர் சிகரம் பேசும்போது, திரைப்படத்துறையின் ஏதோ ஒரு கோரிக்கையை 'அம்மா'வின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தார்!?! ராதாரவி 'அம்மா'வை தெய்வம் என்று கூறியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி பேசியதைப் பற்றி (நாம்) பேசாமல் இருப்பது நலம்! விழாவில் பேசியவர்களில் கமல்ஹாசன் ஒருவர் தான் சற்று நேர்மையாகப் பேசினார். தமிழ்த் திரையுலகில் பலருக்கு நடுநிலை என்பதே கிடையாது. சமயத்திற்கேற்றபடி பல்டி அடிப்பதில் வல்லவர்கள்.

நமது முதல்வர் திருட்டு விசிடியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் மூலம் கலையுலகிற்கு பெரிய நன்மை செய்துள்ளார் என்பதை மனமார ஒப்புக் கொண்டாலும் கூட இந்த விழாவில் நடந்தது தனி மனித வழிபாட்டின் உச்சம் என்றே கூற வேண்டும். பத்ரி கூறியது போல் சில நேரங்களில் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. எனக்கென்னவோ நம் முதல்வர் இவ்வாறு தன்னை பொது மேடைகளில் அளவுக்கு மிக அதிகமாக (எதையோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு!) புகழ்வதை தடை செய்தல் அவசியம் என்று (முதல்வரின் நலம் விரும்பி என்ற முறையில்) நினைக்கத் தோன்றுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, November 09, 2004

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்

திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிற திவ்யப்ரபந்தத்தில் வரும் பல பாடல்களில் காணப்படும் பக்தி ரஸமும் வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பும் பூரண சரணாகதி தத்துவமும் தமிழில் வெறெந்த பக்தி இலக்கியத்திலும் இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது. கீழுள்ள ஆண்டாள் பாசுரங்களில் 'நாராயணனே யாதுமாய் நிற்கிறான், அவனே எனக்கு சகலமும்!' என்ற கருத்து எவ்வளவு அருமையாகக் கூறப்பட்டுள்ளது என்று பாருங்கள்!

501@..
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்*
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


502@..
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்


அடுத்து திருப்பாணாழ்வாரின் (நாலாயிரத்தில் அவர் அருளியது பத்து, அத்தனையும் நல்முத்து!) அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களைத் தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.


935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


அடுத்து திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து, திருவேங்கடமுடையான் தரிசனத்தால் உண்டான பேருவகையோடு எழுதப்பட்ட 2 எளிய பக்திப் பாடல்களைத் தந்திருக்கிறேன்.

1034@
தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*
கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*
அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.


1046@

வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ.*
சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்.*
இனியான் உன்னை* என்றும் விடேனே.


அடுத்து ஸாம வேதத்தின் சாரம் என்றுணரப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து சில பக்திப் பரவசமான பாசுரங்களைக் காணலாம். மாறன் மற்றும் சடகோபன் என்றழைக்கப்பட்ட நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர். அவர் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார்.

அவரைப் பற்றிய ஒரு சுவையான நிகழ்வு ஒன்று இதோ! நம்மாழ்வார் குருகூரில் வாழ்ந்த காலத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி, அயோத்தியின் தெற்கு வானத்தில் ஒரு அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அவ்வொளி ஒரு புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது! அன்றிலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிய பாடல்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், நாம் அறிந்ததே.

2956@..
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


3450
வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.


3451
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.


என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, November 07, 2004

புஷ் வெற்றி - உலகுக்கு ஆபத்து!

2000-இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ·ப்ளோரிடா மாகாணத்து வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டபோது, அம்மாகாணத்தின் உள்துறை செயலரான கேத்தரின் ஹாரிஸ், புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக இருந்தது, எத்தனை பேருக்குத் தெரியும்!? அவரது துரித(!) நடவடிக்கைகளால் அம்மாகாணத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கறுப்பு இனத்தவரின் பெயர்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அவர்கள் மேல் காவல்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி, இது நடைபெற்றது. [நம் நாட்டை, குறிப்பாக பீகாரை எண்ணிப் பாருங்கள்! இது போல ஒன்று (கட்டாய!) நடைமுறைக்கு வந்தால், தேர்தலில் நிற்பவர்கள் மற்றும் வாக்காளர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தகுதி இழந்து விடுவார்கள் அல்லவா?] மேலும், கறுப்பினத்தவர் வாழும் மாகாணத்தின் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை!

முதலில், புஷ் வெற்றி பெற்றார் என்றார்கள். பிறகு பத்திரிகைத்துறை நடத்திய மறு கணக்கெடுப்பில் அல்-கோரே அதிக வாக்குகள் எடுத்ததாகக் கண்டறியப்பட்டு இறுதியில் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டால் புஷ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இதை அறிவித்த நீதிபதி ஸ்கேலியாவின் மகன், புஷ்ஷின் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றே!

2004 தேர்தலில் அத்தகைய பிரச்சினை எதுவும் இல்லை! புஷ் ஜெயித்ததற்கு இரண்டு ஆதார காரணங்களைக் கூறலாம். ஒன்று, பெரும்பான்மை அமெரிக்க மக்களின் 'உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, என் பாதுகாப்பும் சுகவாழ்வும் மட்டுமே எனக்கு முக்கியம், அதை செயல்படுத்தக் கூடியவர் அறிவு குறைந்தவராக, தன் சுயநலத்துக்காக (அதாவது, ஈராக்கின் எண்ணெய் வளத்தை உறிஞ்சுவது!) உலக நாடுகள் எதிர்த்தாலும் மோசமான செயல்களில் ஈடுபடுபவராக இருந்தாலும் எனக்கு அக்கறையில்லை' என்ற குருட்டுப் பார்வை. மற்றது, அமெரிக்கவில் 9/11-க்கு பின்னர் வேகமாக வளர்ந்து வரும் கிறித்துவத் தீவிரவாதக் கொள்கைகள்.

பெரும்பான்மை உலக மக்கள் (அமெரிக்காவின் ஈராக் போருக்கு ஆதரவான நாடுகளையும் சேர்த்து) புஷ் தேர்தலில் தோற்க வேண்டும் என்றே விரும்பினார்கள். புஷ் பிற நாட்டு மக்களின் மேல் ஜனநாயகத்தை தன்னிச்சையாகத் திணிக்க முயலும் அராஜகப் போக்கினால் தான் உலகளாவிய வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். முக்கியமாக ஈராக் போர்க் கைதிகள் மேல் நடத்தப்பட்ட அசிங்கமான முறைகேடான சம்பவங்கள் வெளிவந்தபோது பலர் கொதித்துப் போய் விட்டனர். புஷ் இதையெல்லாம் உணர்ந்ததாகவும் தெரியவில்லை, அப்படியே உணர்ந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவும் தோன்றவில்லை! அவர் அமெரிக்கா தான் 'உலகக் காவலர்' (Policeman of the World) என்று திடமாக நம்பிக் கொண்டு முட்டாள்தனமான காரியங்களை செய்து வருகிறார். இன்னும் செய்வார் என்று உலக மக்கள் அஞ்சுகின்றனர்!

ஆனால், பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு புஷ்ஷின் நடவடிக்கைகளால் உலகமே தங்களுக்கு எதிராகப் போனது பற்றி எந்த அக்கறையும் கவலையும் இல்லை என்றே கூறலாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமெரிக்கா தனது முஷ்டி பலத்தால் (Fist power) பிற நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் மட்டுமே! அமெரிக்காவின் 50 லட்சம் இவாஞ்சலிகல் (Evangelical) தீவிர வகைக் கிறித்துவர்கள் புஷ்ஷின் வெற்றிக்காகத் தீவிரமாக(!) பாடுபட்டனர் என்பதும் ஒரு முக்கியச் செய்தி. இவர்கள் புஷ் மற்றுமொரு போர் (தீவிரவாதத்திற்கு எதிராக என்ற போர்வையில்!) தொடுத்தாலும் அதை வரவேற்கத் தயாராகவே உள்ளனர். அதற்கு, புஷ் ஒரு மறுபடி பிறந்த (BORN AGAIN) கிறித்துவர் என்ற காரணமே அவர்களுக்குப் போதுமானது. ஜார்ஜ் WORST புஷ்ஷின் அடுத்த இலக்கு சிரியாவோ, இரானோ, வடகொரியாவோ, யார் கண்டது? ஜான் கெர்ரி தோற்றார் என்பதை விட இத்தேர்தலில் உலகமே தோற்று விட்டது என்ற கூற்று சாலப் பொருந்தும்!

Saturday, November 06, 2004

பல்லவியும் சரணமும் - V I

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே! 'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash, Singai Anbu மற்றும் சந்திரவதனா ஆகியோருக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு :-))

1. சொர்க்கமும் நரகமும் நம் வசமே, நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே ...
2. வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன் ...
3. ... ஏந்தி வாருங்கள் தீபங்களே, கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே ...
4. வீழும் கண்ணீர் துடைத்தாய், அதில் என் விம்மல் தணியுமடி ...
5. கூனல்பிறை நெற்றியில் குழலாட, கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட ...
6. காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு, கருணை என்றொரு பேரெதற்கு ...
7. உன் பார்வை போலே என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி ...
8. எங்கோ வாழ்க்கை தொடங்கும், அது எங்கோ எவ்விதம் முடியும் ...
9. ... பட்டு விடும் மேனி, சுட்டு விடும் நெருப்பு, சூனியத்தின் நிலைப்பு ...
10. நீ எந்தன் கோயில், நான் அங்கு தெய்வம், தெய்வத்தின் முன்னே ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, November 05, 2004

ஆனந்தமான இந்திய வெற்றி!

கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்! நான் ஒரு 150+ ரன்கள் அவசியம் என எண்ணினேன். நமது பௌலர்களோ 100 ரன்களே போதும் என்று கூறும் வகையில் ஆஸ்திரேலியாவை 93 ரன்களில் சுருட்டி விட்டனர்.

சச்சின் தான் இன்றைய நமது ஆட்டத்திற்கு, கில்லஸ்பியின் ஒரு ஓவரில் அடித்த 3 பவுன்டரிகள் வாயிலாக, முதல் உத்வேகம் தந்தார். இதனால், சிறிது தடுமாறிக் கொண்டிருந்த லஷ்மண் உற்சாகம் பெற்று, அடுத்த ஓவரில், மெக்ராத்தை சற்று விளாசினார். ஆட்டம் சூடு பிடித்து, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக வழி வகுத்தது.

அலுவலகத்தில் இருந்த நான், ஆஸ்திரேலியா ஸ்கோர் 58/7 இருந்தபோது பக்கத்தில் உள்ள நண்பர் இல்லத்துக்கு விரைந்தேன் (நல்ல மழையில்!), இந்திய வெற்றியை TV-யில் கண்டு களிக்கலாமே என்று. இன்னுமொரு விக்கெட் 78-இல் வீழ்ந்தது. 30வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 93/8. நான் கொஞ்சம் மூட்அவுட் ஆகி, இந்தியா ஜெயிக்காது போல் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு, நண்பரின் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்திற்கு சென்று பார்த்தால், ஓரு Amazing Indian victory!!!!! அதைப் பார்க்க முடியாத துரதிருஷ்டக்காரன் ஆகி விட்டேன்!

இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் முரளி கார்த்திக் (ஆட்ட நாயகன் விருது மிகப் பொருத்தம்!) என்பதை யாரும் மறுக்க இயலாது. 2 இன்னிங்குகளிலும் முக்கிமான விக்கெட்டுக்களை, சரியான தருணங்களில் வீழ்த்தினார்!! Hats off to him! 3-0-வை விட 2-1 சற்று ஆறுதலாக உள்ளது!

கிளார்க் சற்று முன்னதாகவே பந்து வீச வந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ??? Rediff-இல் சொன்னது போல், "India escape to victory" என்பது பொருந்தும் என்றே நினைக்கிறேன்!!! Anyway, I am feeling great!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, November 03, 2004

இரண்டு பழைய புதுக்கவிதைக் 'கிறுக்கல்கள்'

கீழே பதியப்பட்டது, பொறியியல் கல்லூரி வாழ்க்கையின் கடைசி மாதங்களில் எழுதியது. அச்சமயத்தில், ஒவ்வொருவரும் அவரவர் எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலும், பயத்திலும் இருந்ததால், எங்களிடையே லேசான பொறாமையும், 'அவன் நம்மை மிஞ்சி விடுவானோ?' என்ற அச்சமும் சற்றே தலை தூக்கின. ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சூழ்நிலை சற்று பாதிக்கப்பட்டது. இதனால் எங்கள் செயல்களில் ஒருவித Negativism இருந்தது எனலாம்! அச்சூழலை (எங்களிடையே இருந்த சிலரின் நடவடிக்கைகளை), நகைச்சுவையாக வெளிப்படுத்த நான் எடுத்த முயற்சி என்று கீழிருப்பதைக் கொள்ளலாம்!

இப்பொழுதெல்லாம் ஒழிப்புலகச் சக்ரவர்த்தியாவதற்கு
காலேஜிலே பயங்கரப் போட்டி!

தான் 'GATE'க்கு படிக்கவில்லையெனில், படிக்கும் பிறருக்கும்
புத்தகம் தர மறுப்பவர் ஒரு வகை!

'PERCENTILE' தியரி அறிந்து படிப்பவரை
சினிமாவுக்கு அழைப்பவர் ஒரு வகை!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
கும்கும்மென்று 'GATE'க்கு குத்தி விட்டு
'நான் SCOOT' என்று சிரிப்பவர் ஒரு வகை!

'ப்ராஜெக்ட் செய்வோம் வாரீர்' என்று மக்களை திரட்டி விட்டு
சமயம் பார்த்து அவரை 'த்ராட்டில்' விடுபவர் ஒரு வகை!

'GATE' எழுதும் நண்பர்கள் டிவி, சினிமா பார்க்கச் சென்றால்
மனதுள் மகிழ்பவர் ஒரு வகை!

இவர்கள் மத்தியில் நண்பர்களின் 'PERCENTILE'-ஐ
கூட்டுவதற்காகவே 'GATE'க்கு 100 ரூபாய்
தண்டம் அழுத நான் ஒரு வகை :-(

பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எழுதிய ஒரு கவிதை அஞ்சலி கீழே.

காரீயத்திற்கு பொன்னின் மேல் இத்தனை வெறுப்பா?
இல்லையெனில் பதினாறு துண்டுகள் சேர்ந்து பாய்ந்து
நிலம் சாய்த்திருக்குமா அப்பொன் மேனியை!
இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் அக்டோ பர் 31
குறித்த பக்கத்தில் எழுத்துக்கள் இருக்க முடியாது,
கரைத்து விடுமே அவற்றைக் கண்ணீர்!
புனித குருத்துவாராக்கள் ஆயுதக் கிடங்குகளானால்
செயற்கை பூகம்பங்கள் நாட்டின் நலமழிக்க முயலும்!
தனி நாடு கேட்கும் கயவர் கூட்டம்
ஆளுக்கொன்றாக தங்கள் தலையிலே
'காலி ஸ்தானம்' வைத்திருக்கும்போது
எதற்கவர்க்கு புதியதொரு 'காலிஸ்தான்'!
நாட்டைத் துண்டாட எண்ணும் போர் வெறிக் கழுகுகளுக்கு
மற்றுமொரு சமாதானப்புறா பலியிடப்பட்டு விட்டது!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, November 01, 2004

எப்போதோ (பொழுது போகாமல்!) எழுதிய சில 'கவிதை'கள்!

கீழே பதியப்பட்டவை கிட்டத்தட்ட 20 வருடங்கள் தொன்மையானவை!?!? எனவே, படித்து விட்டு தயவு செய்து திட்டவோ அடிக்கவோ வராதீங்க! படிச்சதுக்கு அப்பால, கண்டுக்காம போய்கினே இருங்க!

1. பார்வையைப் பொறுத்து!

கவிதைக் கப்பலின் மேல் எனது
'கற்பனை' எனும் படகு மோதுவதால்
சிதறப் போவது படகு தானே,
கப்பலுக்கு சேதம் அதிகமில்லை!
அதனால் தான் நானும் கவிதை எழுதத் துணிந்தேன்,
என்றேன் என் தோழனிடம், அதற்கு அவன்,
'கவிதை' விமானத்தின் மேல் உன் 'கற்பனை' பறவை
மோதுவதால் விளையும் பங்கத்தை யோசி, என்றான்!

2. ஜில்-1

இப்பொழுதெல்லாம் தென்றல் சிறிது வேகமாக வீசினால்
என் மனதில் மகிழ்ச்சிக்கு பதில் அச்சமே பிறக்கிறது!
உன் துடி இடையை முறிக்க வாயுதேவன் அனுப்பிய
அஸ்திரம் தானே அது!

3. ஜில்-2

லேசான காய்ச்சல் குணமடைய
டாக்டரிடம் சென்றேன் ஒரு முறை,
ஸ்டெத்தை நெஞ்சில் வைத்தவர்
திகைத்து விட்டார்!
'என்ன உங்கள் இதயத் துடிப்பையே
உணர முடியவில்லையே என்று!'
அவரறிவாரா நான் என் இதயத்தை
உன்னிடம் தந்திருப்பதை!
நான் டாக்டரிடம் செல்வதையே நிறுத்தி விட்டேன்
அவர் கேட்கும் இவ்வினாவுக்காகவே!!!

கீழுள்ளவை GCT வகுப்பறைகளில் ('கடி' பட்ட வேதனையில்!) எழுதியவை! சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை 'மன்னிக்க வேண்டுகிறேன்'!

மலைகளயும் சிலைகளையும்
வெறுத்தார் மாந்தரில்லை!
நான் மனிதனாக இல்லாவிடினும் பரவாயில்லை,
எனக்கு 'அண்ணாமலை'யைக் கண்டாலே கடுப்பு!

செல்வங்கள் வேண்டாம்,
சிற்றின்பம் வேண்டாம்
தப்பித்தால் போதும்,
அ(ஆ)றுமுகத்திடமிருந்து!

தமிழ்நாட்டை தன் பேச்சுத் திறனால்
கலக்கினார் அந்நாள் அண்ணாதுரை!
இவரும் தான் எங்கள் அடிவயிற்றை கலக்குகிறார்,
தன் நவீன ஆங்கில உச்சரிப்புகளால்!
இவர் பல்ஸ் டெக்ணீ ...க் (Pulse Techniiiiique!) வகுப்பெடுக்கும்
எங்கள் புதுமை அண்ணாதுரை!

என்றென்றும் அன்புடன்,
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails